தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்குமா குரல் கொடுத்த மகேஸ்வரன் !

Monday, January 7, 2008 - - 2 Comments


ஜக்கிய தேசியக்கட்சி மூலமாக அரசியலில் பிரவேசித்த தியாகராசா மகேஸ்வரன் கட்சியின் சிங்கள பெரும்பான்மைவாத கொள்கையில் இருந்து விலகி தமிழ்மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட்டு வந்தவர்.
குறிப்பாக தமிழ்த் தேசியத்தை ஆதரித்து வெளிப்படையாக தனது கருத்துக்களை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் வெளிப்படுத்தி வந்த மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைக்கு மாறாக அவசர காலச்சட்டத்திற்கு எதிராக முதன் முதலாக பாராளுமன்றத்தில் வாக்களித்த தமிழ் உறுப்பினராவார். அதன் பின்னர்தான் பெரும்பான்மைவாத கட்சியில் அங்கம் வகிக்கின்ற சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க ஆரம்பித்தனர். சிங்கள பெரும்பான்மை வாதக்கட்சியின் மூலமாக பாராளுமன்றத்திற்கு தெரிவானாலும் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் தமிழ்மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
2000 ஆம் ஆண்டு முதல் முறையாக யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவானவர். 48 ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான உறுப்பினராக விளங்கினார். தமிழ் மக்களுடைய போராட்;டம் அகிம்சைப் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்குப் பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தோ அல்லது சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்தோ அல்லது அந்தக்கட்சிகளில் அங்கத்துவம் பெற்றோ பொதுத்தேர்தல்களில் தமிழர்கள் எவரும் போட்டியிடுவதில்லை. ஏனெனில் இனரீதியான அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றமை அதற்கு காரணமாகும். மேற்படி இருகட்சிகளுமே சிங்கள பெரும்பான்மைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வந்தன. இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் தமிழர்கள் தங்களுக்கென கட்சி அமைத்து பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டார்கள்.
48 ஆண்டுகளின் பின்னர் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். அவ்வாறான வாக்களிப்பில் மகேஸ்வரன் யாழ்ப்பாணமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை புறந்தள்ளி விட்டு மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் தனியான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்று அரசாங்கம் பேச்சு நடத்தவேண்டும் என்பதும் தமிழ் ஈழக் கோரிக்கையும் ஏற்கும் வகையிலான நிலைப்பாடுகளும் அந்த விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன. மிகத்துணிவுடன் கட்சியின் சம்மதம் இன்றியே அந்த நிலைப்பாடுகளை விஞ்ஞாபனமாக முன்வைத்துப் போட்டியிட்ட மகேஸ்வரன் வெற்றி பெற்றதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி தனது பாராளுமன்ற கன்னிப்பேச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
கொழும்பிலும் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் சிங்கள பெரும்பான்மைவாதக்கட்சிகளுடன் சேர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் உறுப்பினர்கள் சிலர் தங்களுடைய பதவிகளை காப்பாற்றிக்கொள்வதற்காக தமிழர்களுடைய அபிலாசைகளை மறந்து தாங்கள் சார்ந்த கட்சிகளின் நிலைப்பாடுகளையே முன்வைத்து பாராளுமன்றத்தில் பேசுவார்கள். ஆனால் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்த மகேஸ்வரன் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு சாதகமாக ஒருபோதும் பேசியது கிடையாது. தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லையானால் தமிழ் ஈழம்தான் ஒரேதீர்வு என்று பாராளுமன்றத்தில் உரக்கக்கூறியிருந்தார்.
2001 ஆம் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது மகேஸ்வரன் ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாக தனிப்பட்ட முறையில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் ஈழத்தை ஆதரித்திருந்தது. அமோக வெற்றி பெற்ற மகேஸ்வரன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை அமைத்துக்கொண்டது. அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட மகேஸ்வரன் தனது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருந்தார். நோர்வேயின் ஏற்பாட்டுடன் சமாதான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி போன்ற கட்சிகள் சமாதானப் பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. அப்போது எதிர்க்கட்சியின் பிரதான உறுப்பினராக இருந்த ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே (தற்போது அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்) மகேஸ்வரன் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தமிழ் ஈழத்தை வழங்குவதுதான் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாடா என்று அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் (தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர்) கேள்வி தொடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுடைய பிரச்சினை தீர்க்கவேண்டியது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடமை என்று கூறியதுடன் எந்தவொரு உறுப்பினர்களின் உணர்வு வெளிப்பாடுகளுக்கு எதிராக பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது ஏற்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாக அமைச்சராக இருந்துகொண்டே ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தையும் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவையும் காரசாரமாக விமர்சித்துவந்தார்.
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட மகேஸ்வரன் தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்தார். கொழும்பு மாவட்ட தேர்தல் வரலாற்றிலேயே என்றும் இல்லாவாறு 58,800 வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். துப்பாக்கிச்சூடு பட்டதும் அரசியலை விட்டு ஒதுங்காமல் தொடர்ந்தும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று செயற்பட்ட மகேஸ்வரன் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் 3,000 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டபோது அரசாங்கத்தை நேரடியாக கண்டித்திருந்தார். தடுப்பு முகாம்களுக்கு கைதிகளின் உறவினர்களை அழைத்துச் சென்றிருந்தார். பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து தமிழர்கள் மீதான கைது நடவடிக்கைகள் என்பது திட்டமிட்ட நடவடிக்கை என்று கண்டித்திருந்தார். பாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்துகின்ற ஒவ்வொரு உரையும் தமிழ்த் தேசியத்தின் நியாயப்பாடுகளை வெளிக்கொணருவதாகவே அமைந்திருந்தன. அரசாங்கத்தின் பேரினவாத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தியிருந்தன.
இறக்கும்வரை தமிழ்த் தேசியத்தையே உச்சரித்துக்கொண்டிருந்த மகேஸ்வரன் தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் விட்டுப் பிரிந்தமையானது அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்ல அனைத்து தமிழர்களையுமே கவலையில் ஆழ்த்தியுள்ளது. வருடப்பிறப்பன்று மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கேற்ப சிவன் ஆலயத்திலேயே அவரது உயிரைப் பறிக்கும் இயமன் துப்பாக்கி வடிவில் வந்துவிட்டானா என்ற ஆத்திரத்துடனும் இந்த அக்கிரமங்களை சர்வதேசம் தட்டிக்கேட்காதா என்ற ஆதங்கத்தோடும் தமிழர்கள் தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர்.
ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் வரிசையில் மகேஸ்வரனும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணமானமை பாராளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியதுடன் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருந்த அற்பசொற்ப நம்பிக்கையும் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே அற்றுப்போய்விட்டது. வரவு-செலவு தட்டத்திற்கு எதிராக வாக்களித்தமையினாலும் தமிழர்களுக்கு எதிரான மனிதவுரிமைகளுக்கு எதிராக பேசியமையினாலும் அவருக்கு வழங்கப்பட்டிருந்ந பாதுகாப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்தான் இரண்டாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மகேஸ்வரன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டமையானது தமிழ் மக்கள் உட்பட சகல தரப்பினருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசாங்கம் பதில்கூற கடமைப்பட்டுள்ளது.
நன்றி: வீரகேசரி (02.01.08)