மதப் பிரச்சாரங்கள் மனித ஈடேற்றத்துக்கு வழிவகுக்குமா?

Wednesday, August 29, 2007 - - 2 Comments


ஒவ்வோரு மனிதனும் ஏதோ ஒரு இனம், மதம் சார்ந்தவனாகவும், ஏதோ ஒரு மொழியை தாய் மொழியாக கொண்டவனுமாகவே உள்ளான். இவற்றில் இனமும் மொழியும் பிறப்பின் போது எவ்வாறிருந்ததோ இறப்பு வரைக்கும் அவனது அடையாளமாக, மாற்ற முடியாத ஒன்றாக, என்றைக்கும் நிழல் போல் தொடரும் அம்சங்கள். ஆனால் மதம் அவ்வாறில்லை. மனிதன் தான் விரும்பும் மதத்தை தேர்ந்தெடுத்தது பின்பற்றும் உரிமை அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கங்களும் இதற்கு தடைவிதிக்கவில்லை.
இதனையே சாதகமாக்கி, அல்லலுறும் மக்களுக்கு விடுதலை கொடுக்கிறோம் எனும் பெயரில், மதத்தை மூலதனமாக்கி, அதனையே வியாபாரப் பொருளுமாக்கி மக்களை ஏமாளிகளாக்கும் மதவாதிகள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமேயுள்ளனர். மாபெரும் எழுப்புதற் கூட்டங்கள் என்ற பெயரில் பூச்சாண்டி காட்டுபவர்கள் ஒரு புறம். வாழும்கலை, தியானம் எனும் பெயர்களில் கூட்டம் சேர்ப்பவர்கள் ஒருபுறம். இங்கே முதற் சாரார் மதத்தைப் பரப்பவும், இரண்டாம் சாரார் மதத்தை தக்கவைக்கவும் பாடுபடுகின்றார்கள். இத்தகையோரின் செயற்பாடுகள் மனிதனுக்கு இயல்பாகவே தோன்றக் கூடிய மதத்தின் மீதான பற்றை, பக்தியை, மரியாதையை வளர்க்கப் பயன்படப்போவதில்லை. மாறாக ஏதோ ஒரு கட்டாயத்தினாலும், கவர்ச்சியினாலும் உந்தப்பட்டு மதம் என்பது தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கையாளும் ஊடகம் எனும் எண்ணத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்து இயல்பாகவே இருந்துவந்த மதத்தின் மீதான பற்றையும் மரியாதையையும் கெடுக்கும் வழியே என்பது எனது கருத்து.
நான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்லன். ஏனெனில் சிந்திக்க ஆரம்பித்த நாள்முதல் ஒரு நாத்திகன். ஆனால் மதங்களுக்கு எதிரானவன் அல்லன். மதங்ளை மதிப்பவன். ஆனாலும் மதவாதிகளின் இத்தகைய, மக்களை பகடைகளாக்கும் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்காமலிருக்க முடியவில்லை.
டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன். இவர்தான் உலகளாவிய ரீதியில் நீண்ட நாட்களாக யேசுவை அழைத்துக் கொண்டிருப்பவர். இலங்கையிலும் அடிக்கடி இத்தகைய அழைப்புக் கூட்டங்களை நாடாத்துபவர். இலங்கை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுக்கும் இவர் ஆசீர்வாதம் வழங்கியிருந்தார்.அதன்பின்னர் வெளியிட்ட தீர்கதரிசனங்களை "இலங்கைக்காகப் பிரார்த்தனை" எனும் நூலில் காணக்கூடியதாயிருந்தது.
1. இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)
2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!
3. எல்லா தேயிலைத் தோட்டங்களும் செழிக்கும்.
4. இதனால் ஏற்றுமதி ஏராளமாக பெருகும், வருமானம் அதிகரிக்கும்.
5. இலங்கை அரசு பல தேசங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பணிபுரியும், வேலை வாய்ப்புகள் பெருகும்இ வேலையில்லாத் திண்டாட்டம் குறையும்.
6. நாட்டின் பெரும் பகுதி வருமானம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை தேவன் குறைப்பார், அதை நாட்டு மக்களின் நலனுக்காக செலவு செய்வார்கள்.
இவையனைத்தும் ஆண்டவன் அருளியதாக தினகரன் 2006 ஏப்ரலில் வெளியிட்ட தீர்க்கதரிசனங்கள். இவற்றில் ஒன்றாவது தீர்க்கதரிசனத்துக்கமைய இடம்பெற்றதா என்பது அந்த அண்டவனுக்கே வெளிச்சம்.
தீர்க்க தரிசனத்தின் பின்னரான ஒருவருடத்தில் இடப்பெற்றது என்ன? தமிழ்மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட்டனவா? தமிழருக்கு எதிரான யுத்தத்துக்காக பாதுகாப்புச் செலவு ஒதுக்கீடுதான் குறைக்கப்பட்டதா?
மாறாக மகிந்தவுக்கு வழங்கிய ஆசீர்வாதத்துக்கிணங்க அவர் தமிழர்களை அழிக்கும் பணியை திறம்பட செய்துவருகிறார். அவருக்கு ஆசிவழங்க முன்னர் தினகரன் சில விடயங்களை சிந்தித்திருக்க வேண்டும். மகிந்த அரசின் இன ஒழிப்பின் போது அழிக்கப்பட்ட தேவாலயங்களைப்பற்றியோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கம் அவர்களது உயிர் தேவாலயத்தினுள் பிரார்த்தனையின் போது பறிக்கப்பட்டமை பற்றியோ சிந்தித்திருந்தால் தமிழர்களை அழித்தொழிக்கும் பேரினவாத அரசுத் தலைவருக்கு ஆசீர்வாதம் வழங்கியிருக்க மாட்டார்.
தான் சார்ந்துள்ள இனத்தைவிட தான் பரப்பும் மதமே தனக்கு முக்கியம் என உணர்த்தியுள்ளார் தினகரன். எனவே இவரது பிரார்த்தனைகளும், எழுப்புதற் கூட்டங்களும் மக்களுக்கு எந்தவித பயனையும் தோற்றுவிக்காது, தனது மதத்தை பரப்பும் ஓர் முயற்சியாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
வெறும் ஆசை வார்த்தைகளையும், அற்ப சொற்ப சலுகைகளையும் நம்பி தமது பழமையான, தொன்றுதொட்டு தமது மூதாதையர்கள் கடைப்பிடித்து வந்த மதத்தை விட்டு வேறு மதங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.
மற்றையது வாழும் கலை. வாழும்கலை பயிற்சி என்றால் என்ன? (தெரிந்தவர்கள் தயவு செய்து தெளிய வையுங்கள்.) இந்தப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களைக் கூட கேட்டுவிட்டேன். அவர்களது பதிலும் எனக்கு திருப்தியாக இல்லை. கொழும்பில் கூட இப்போது இத்கைய பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. (பயிற்சிக் கட்டணமாக ரூ 2500.00 அறவிடப்படுகிறது.) சமையற்கலை வகுப்புக்கள், சிகை அலங்காரக் கலை வகுப்புக்கள், தையற்கலை வகுப்புக்கள் இவற்றைப்பற்றி எனக்கு நன்கு தெரியும்.
ஆனால் வாழ்க்கையை இவ்வாறுதான் வாழவேண்டும் என வரையறுத்து, அதனைப் பயில்வதற்கு காலம் வரையறுத்து, கட்டணம் அறவிட்டு பயிற்றுவிக்கும் முறையை ஆரம்பித்து வைத்து, புதுமையான வழியில் பணம் சம்பாதிக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
பூமியில் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எவ்வாறு வாழவேண்டும் என நன்கு தெரியும். இதுவரைகாலமும் வாழ்ந்து கழித்தவர்கள் எந்தவொரு வாழும்கலை பயிற்சிக்கும் சென்று பயின்றுதான் தமது வாழ்கையை திறம்பட வாழ்ந்து காட்டினார்களா?
சரி. மனிதன் வாழக்கூடிய வாழ்க்கை முறைகளை கூறும் பயிற்சியாக இருப்பின் அதனை கட்டணம் அறவிட்டு பயிற்றுவிப்பதன் நோக்கம் என்ன? ஆக கட்டணம் செலுத்தி பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் மாத்திரம்தான் வாழ்க்கையில் ஈடேற முடியுமா?
இத்தகைய வழிகளில் மதத்தை வியாபாரமாக்கி, மதத்தின் பெயரால் மக்களிடம் பணம் புரட்டும் மதவாதிகளும், மதத்தை பரப்பும் நோக்கோடு மக்களை பரிதாபத்துக்குரியவர்களாக மாற்றும் தினகரன் போன்ற பிரச்சாரக்காரர்களும் இருக்கும்வரை மதங்களை மரியாதைக்கரிய மதங்களாக மதிக்கும் மனித இயல்பு தொலைந்துபோயிருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

தமிழனின் தனித்துவம் தொலைந்துபோகிறது !

Wednesday, August 22, 2007 - - 2 Comments


இலங்கைத் தமிழ்மாணவர்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சிறிலங்கா அரசின் தீவிர இராணுவ நடவடிக்கைளால் இரண்டு லட்சத்திற்க்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து கற்க முடியாத நிலையில் இடம் பெயர்ந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் கடந்த இரண்டுவருடங்களில் மட்டும் இந்த நிலை இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தற்போதைய அரசாங்தத்தின் தீவிர யுத்த முன்னெடுப்புகளின் காரணமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மட்டும் பலஆயிரக்கணக்கான மாணவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாகவும், பலஆயிரக்கணக்கான மாணவர்கள் கட்த்தப்படுக்காணாமல் போயுள்ளதாகவும், அத்தோடு பல மாணவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் எனவும், பலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை என்னவோ உண்மைதான். ஆனால் வெறுமனே அறிக்கைகள் மட்டும் பிரச்சினைகளுக்கத் தீர்வாகப்போவதுமில்லை. தீர்வுக்கான வழியை கூறப்போவதுமில்லை.
ஒரு இனத்தின் வளர்ச்சியை முடக்குவதென்பது அந்த இனத்தின் கல்விக்கான வழியை அடைப்பதன் மூலமே சாத்தியப்படும். அந்தவகையில் இலங்கை அரசு இந்தப்பணியை செவ்வனே செய்துவருகிறது.
ஐ.நா வின் அறிக்கையின் படி நோக்குவோமானால் தமிழ்ச் சந்ததியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போபவர்களில் இரண்டு லட்சம் பேர் தமது இலட்சியங்களைத் தொலைத்துவிட்டு, அல்லது தாமே தொலைந்து போய் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலமை நீடிக்குமாயின் தமிழர்கள் தமது தனித்துவத்தை, அடையாளத்தை தொலைத்துவிட்டு தலைநிமிர்ந்து வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
தமிழன் தான் இழந்துள்ள ஒவ்வொன்றையும் என்றோ ஒருநாளில் திரும்பப்பெறுவான். ஆனால் கல்வி என்பது குறிப்பிட்ட வயதுக் காலப்பகுதியிலேயே சாத்தியப்படும். அதனை பின்நாளில் பெற்றுக் கொள்ள முடியாது.
எனவே எமது சந்ததியின் எதிர்காலம் குறித்து இப்போதைக்கு கவலைப்படுவதைத்தவிர வேறெதுவும் செய்யமுடியாது என நினைக்கிறேன்.
இருந்தாலும் ஒருவிடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப் படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது தமிழ் மக்களுக்கு கல்விரீதியில் ஏற்படுத்தப்பட்ட புறக்கணிப்பேயாகும். அதே தவறையே தொடர்ந்து செய்யும் பெரும்பான்மை இனம், இவற்றுக்கெல்லாம் பதில் கூறப்போகும் நாள் வெகு தூரத்திலில்லை.

தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை

Sunday, August 19, 2007 - - 17 Comments


கொழும்பில் தமிழர்கள் எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கிறார்கள் என கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் நிகழ்வு ஒன்றில் ஏராளமான தமிழர்கள் நேற்றைய தினம் கலந்து கொண்டனர். சூரியன் fm வானொலியின் ஏற்பாட்டில் தென்னிந்தியக் கலைஞர்களும், நம்மூர் கலைஞர்களும் பங்குகொள்ளும் இசைநிகழ்ச்சி ஒன்று நேற்று இரவு கொட்டாஞ்சேனை இரத்தினம் மைதானத்தில் இடம்பெற்றது.மைதான வாயிலில் பாதுகாப்புப் படையினரின் உடற் சோதனை இடம்பெற்றது. தமிழர்களால் தமிழர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இத்தகைய சோதனையின் அவசியம் என்ன என்பது எனக்கு அப்போது விளங்கவில்லை. வானவேடிக்கைகளுடன் விழா ஆரம்பமானது. ஆரம்பிக்கப்பட்ட வேளையிலிருந்து அறிவிப்பாளர்களின் வாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வாசகம் “ஐக்கிய தேசியக் கட்சியின் வடகொழும்பு அமைப்பாளர் துமிந்ந சில்வா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இசை நிகழ்ச்சி” என்றவாறு இருந்தது. அப்பொதுதான் எனக்கு வாயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உடற்சோதனையின் காரணமும், மைதானத்துக்கு வெளியே சுவரெங்கும் ஒட்டப்பட்டிருந்த துமிந்ந சில்வாவின் படம் பொறித்த சுவரொட்டிகளின் காரணமும் விளங்கியது.
ஆக ஐக்கியதேசியக் கட்சியின் பிரச்சார நிகழ்வு ஒன்றுக்கு இசைநிகழ்ச்சி என்ற பெயரில் கூட்டம் சேர்த்து தமிழர்களை கேணையர்களாக்கியுள்ளது சூரியன் fm என்பது தெட்டத்தெளிவாகியுள்ளது.
முதலில் இத்தைய ஒரு காலகட்டத்தில், அதாவது இலங்கையின் எதோ ஒரு மூலையில் தமிழன் நிர்க்தியாக்கப்பட்டுள்ள வேளையில் இவ்வாறான ஒரு கேளிக்கை நிகழ்ச்சி அவசியம்தானா? சரி கொழும்புத் தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற ஓர் இசைவிருந்தாக எடுத்துக் கொண்டாலும் அது தமிழ்க் கலாச்சாரத்துக்கு மதிப்பளிக்கும் நிகழ்வாக அமைந்திருந்ததா? இல்லை. முற்று முழுதாக பெரும்பான்மையினரின் கலாச்சாரம் திணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது. சிங்களப் பாடகி ஒருவர் கலந்து கொண்டு சில பாடல்களைப் பாடியிருந்தார். பாடியது மட்டுமல்லாது தமது நாறல் கலாச்சாரத்துக்க ஏற்றவாறு தனது அசைவுகளை அழகாக காட்டிவிட்டுப் போயிருந்தார். இவருக்கு “நெருப்புப் பெண்” என அறிவிப்பாளர்கள் புகழாரம் வேறு சூடியிருந்தார்கள். இதுமட்டுமல்லாது பாடல்களுக்கு நடனமாடுவதற்கு அரைகுறை ஆடைகளுடன் சிங்களப் பெண்கள் இறக்கப்பட்டிருந்தார்கள். இவர்களும் தமது அங்க லாவண்யங்களை குறைவில்லாமல் காட்டிச் சென்றிருந்தார்கள். தமிழர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு இத்தகைய கலாச்சார சீர்கேடுகள் அனுமதிக்கப்பட்டிருந்தமை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதே வேளை தமிழர்களின் கலாச்சார விழுமியங்களை வெளிப்படுத்தும் ஓர் நிகழ்ச்சியாக அமைந்திருப்பின் வரவேற்கப்பட வேண்டியதாக இருந்திருக்கும்.
அவ்வாறெனில் கொழும்புத் தமிழ் ஊடகங்கள் எவ்வாறன நிகழ்ச்சிகளை நடாத்தமுடியும் எனும் கேள்வி எழலாம். உண்மைதான் அவற்றால் போராட்ட உணர்வை தூண்டக்கூடிய எந்த நிகழ்ச்சியையும் துணிந்து கொழும்மில் நடாத்த முடியாதுதான். ஆனால் தமிழ் உணர்வையும், மொழிப்பற்றையும், கலாச்சார மேம்பாட்டையும் வளர்க்க கூடிய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தடையேதுமில்லையே.
அதைவிடுத்து இத்தகைய கீழ்த்ரமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தமிழ் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பது முற்றிலும் தவறான ஒன்றாகும்.ஒவ்வொரு தமிழனினுள்ளும் தான் சார்ந்துள்ள இனம் சார்பான ஒரு உணர்வு மறைந்து கிடக்கிறது. எனவே ஊடகங்கள் என்ற வகையில் அதனை வெளிக்கொணர வேண்டியது பொறுப்புள்ள ஊடகங்களின் கடமையாகும். தமிழன் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழன் சொந்த மண்ணிலேயே அகதி ஆக்கப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை, இந்த நிலமை நீடிக்குமாயின் தமிழ்ச் சந்ததியின் எதிர்காலம் போன்ற விடயங்களை அலசுவதன் மூலம் தமிழர்களின் மனதில் உணர்ச்சி விதைகளை தூவுவதை விடுத்து, அரசியல் வாதிகளின் அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழர்களின் மானத்தை அடகுவைத்து, பெரும்பான்மை இன கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் நாடத்தப்பட்ட விழாவில் மக்களை கலந்துகொள்ளத் தூண்டிய சூரியன் fm இன் செயற்பாடு தமிழ்ப்பற்றாளர்களை பெரிதும் பாதித்துள்ளது.இத்தகைய ஊடகங்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கையில காசு வாயில தோசை.

Friday, August 17, 2007 - - 4 Comments



இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்களின் வாழ்க்கை எவ்வாறிருக்கிறது என்பதை அலசும்போது அந்ந அவலங்களையெல்லாம் கொட்டி ஒரு நூல் வெளியிடலாம் போலுள்ளது.இந்த அவலங்களெல்லாம் நான் எனது முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டது போல ஆடம்பர வாழ்க்கை வாழும் கொழும்புத் தமிழர்களுக்கல்ல. மாறாக சொந்த மண்ணை விட்டுவந்து கல்வித்தேவைக்காகவும், வேலைவாய்ப்புக்களுக்காகவும் கொழும்பில் வதியும் பிறமாவட்ட தமிழர்களுக்கேயாகும். எத்தனையோ பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இவர்களது வாழ்க்கை போராட்டமயமானதாகவே இருந்துவருகிறது.முன்னரெல்லாம் காரணமில்லாமல் தங்கியிருப்பவர்களுக்கத்தான் இத்தகைய கெடுபிடிகள் இருந்துவந்தது. ஆனால் இப்போதெல்லாம் நிலமை அவ்வாறில்லை.நேற்றையதினம் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நேற்று அதிகாலை எனது நண்பனொருவன் பொலிஸ் பதிவு இல்லாமல் தங்கியிருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தான். எனது சகமாணவர்கள் சென்று விடுவிப்பதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தும் மாலைவரை அவன் விடுவிக்கப்படவில்லை. முடியாது எனக் கூறாமல் சிறிது நேரத்தில் விடுகிறோம் என இழுத்தடித்துக்கொண்டிருந்தார்கள்.மாலையில் நானும் சக நண்பர்களும் சென்றபோதும் நிலமை அவ்வாறே இருந்தது.இந்த முயற்சி பலனளிக்காது என்ற முடிவுக்கு வந்த நாங்கள் பொலிசாருடன் தொடர்புடைய ஒருவர் மூலம் அணுகினோம். பிரச்சினை சுலபமானது. வெளியில் வந்தவர் கூறினார். "விடுவார்கள் பிரச்சினையில்லை. நாலு போத்தல் வாங்கி கொடுத்தால் போதுமாம்.". பிறகென்ன !
வேலைகள் துரிதமாக நடந்தன. நண்பன் வெளியில் வந்தான்(வெளியேற்றப்பட்டான்).
இந்ந சம்பவம் எடுத்துக்காட்டுவது எதனை?
கொழும்புப் பாதுகாப்பிலுள்ள ஓட்டையையா? அதாவது பொலிசாரின் "கையில காசு வாயில தோசை" எனும் பாணியிலான செயற்பாட்டையா?
அல்லது வாயிருந்தும் ஊமைகளாக செய்யாத குற்றத்துக்காக சிறை சென்று லஞ்சம் கொடுத்து வெளிவரும் தமிழர்களின் இயலாமையையா?
விடைகாணத் தயங்காதீர்கள். இவற்றுக்கெல்லாம் நாமே தீர்ப்பெழுத வேண்டிய காலமிது. லஞ்சத்தைப்பற்றிக்கூட கவலைப்படத்தேவையில்லை.ஏனெனில் நடந்தது எமது தேசத்திலல்ல. வாங்கியவனும் தமிழனல்ல. கொடுத்தவன்தான் தமிழன்.
குற்றமே செய்யாத ஒரு தமிழனை வெளியே கொண்டுவருவதற்கு இப்படியொரு வழி இருக்கும்போது அதனை பயன்படுத்துவதில் தவறில்லை.
இங்கெ தவறுகளெதுவும் நமதல்ல.
எம்மை நசுக்கி தங்களை வளர்த்தக்கொள்ளும் சிங்கள பாதகர்களின் தவறுகளே தவறுகள்.ஆனால் தாங்கள் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு இன்றைக்கு விளங்காத போதும் என்றோ ஒருநாள் ஒட்டுமொத்த சிங்கள சமூகமும் இதற்கெல்லாம் பதில் கூறியே ஆகவேண்டும்.

"தடைகள் தமிழனுக்கல்ல என தரணியெங்கும் முழங்குவோம்"

- - 4 Comments


பெயரை மாற்றலாம் பிறப்பை மாற்ற முடியுமா?
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதே மனித வாழ்க்கை. பிறப்பிலிருந்து இறப்புவரையான காலம் வரையும் மனிதன் போராட வேண்டியுள்ளது. இந்தப்போராட்டம் நாம் உயிர் வாழ்வதற்கு மட்டுமன்றி எமது அடையாளங்களை தக்கவைத்துக் கொள்வதற்குமாகும்.ஒரு மனிதன் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சங்கள் அவனுக்குரிய அடையாளம் என்பதினுள் அடங்கும்.ஆனால் அடையாளங்களை இழந்துதான் வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் மாணவர்கள் தமது இறுதி ஆண்டுக் கல்வியை வெளிநாடுகளில் தொடரும் வாய்ப்பு ஒன்று உள்ளது. இதில் இணையவிரும்புவோருக்கான ஒன்றுகூடல் அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஏராளமான தமிழ் மாணவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். தமிழர்களைப் பொறுத்தவரையில் கொழும்பு மற்றும் வெளிநாடுகள் இரண்டுமே ஒன்றுதானே. ஏனெனில் இரண்டுமே நமது சொந்தமண் இல்லையே. எனவே வெளிநாட்டில் கல்விபயில அவர்கள் ஆசைப்பட்டதில் தவறேதுமில்லை என நினைக்கிறேன்.
இதில் அவுஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் விபரங்கள் கூறப்பட்டபோது ஒருவிடயம் ஆணித்தரமாக கூறப்பட்டது.
"people who was born in jaffna or Batticalo, We are very sorry."
ஆக யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களினதும், மட்டக்களப்பில் பிறந்தவர்களினதும் எதிர்காலக் கனவுகளுக்கு அவுஸ்திரேலிய அரசு ஆப்பு வைத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.தமிழன் சொந்தமண்ணிலிருந்து கல்வி பயில இயலாமையால் அந்நிய தேசத்தில் சுற்றிவளைப்புக்கள், சோதனைச்சாவடிகள் இல்லாத இடத்தில் சிறிது காலம்தங்கி கல்விபயில கூடியதாயிருக்கும் ஒரேயொரு வழியையும் அடைப்பதன் நோக்கம் என்ன?
தமிழர்களை பாமரர்களாக்குவதா? அல்லது தமிழன் எவ்வளவு அல்லல்பட்டாலும் இலங்கையில்தான் கற்கவேண்டுமென்பதா? அல்லது தமிழர்கள் தமது பிறப்பை மறைத்து சொந்த அடையாளங்களை இழந்து கல்வியை தொடருவார்கள் என்ற எதிர்பார்ப்பினாலா?
யாழ்ப்பாணத்தவர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களும் செய்த பாவமென்ன?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறப்போவது யார்?எவருமில்லை.நாமாகத்தான் விடைகாண வேண்டும்.தொடரும் இத்தகைய புறக்கணிப்புக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.ஆனால் யாழ்ப்பாணத்தமிழர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் புறக்கணித்ததன் மூலம் எதையும் சாதிக்கப்போவதில்லை.
அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.கல்வி ஒன்றுதான் யாழ்ப்பாணத்தவர்களின் நிலையான சொத்து.எத்தகைய இடர் வந்த போதும் அவர்கள் அதனை இழக்கவில்லை. இழக்கப்போவதுமில்லை.ஏனெனில் குப்பி விளக்கில் படித்த(படிக்கின்ற) பரம்பரையல்லவோ?
எனவே இத்தகைய தடைகள் என்றுமே தமிழனின் கல்வித்தாகத்தை தடுக்கப்போவதில்லை.
"தடைகள் தமிழனுக்கல்ல என தரணியெங்கும் முழங்குவோம்"

இந்துவின் மைந்தனுக்கு இதய அஞ்சலிகள்.

Friday, August 3, 2007 - - 13 Comments


வணக்கம்,
எல்லோருக்கும் கொழும்பு வாழ்க்கை பழகிப்போயிருக்கும்.சுமூகமான இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஆனால் இது இன்னமும் எத்தனை நாட்களுக்கு என்பது கேள்விக்குறியே? அர்த்தமற்ற போலித்தனமான வாழ்க்கைக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.
கண்ணிருந்தும் குருடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் வாழ்ந்தால் இறுதியில் எஞ்சப்போவது என்ன? சற்று சிந்திப்போம்.
நமது தோழர்கள், ஒன்றாக படித்தவர்கள் தமது உயிர்களை வீணாக காவுகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை நிறுத்தப்படவேண்டும். இந்த வரிசையில் நேற்றைய தினம் பலியெடுக்கப்பட்டவன் எனது நண்பன், இந்துவின் மைந்தன், சிறந்த பேச்சாளன், வளர்ந்துவரும் ஊடகவியலாளன். மொத்தத்தில் நாட்டுக்குத் தேவையானவன்.
அதீத திறமைகளை தன்னுள் புதைத்திருந்த ஒரு இளம் மேதை அநியாயமாக அழிக்கப்பட்டிருக்கிறான். இவன் செய்த தவறென்ன? அடிமைப்பட்ட தனது இனத்தின் மீது பற்று வைத்திருந்தான். கல்லூரியில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியின் மூலம் அதனை வெளிப்படுத்தினான். இது தவறா?
இது ஒவ்வொரு தமிழனினுள்ளும் புதைந்துள்ள உணர்வு.அவ்வாறெனில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்களா?இவன் மட்டுமல்ல குடாநாட்டில் எஞ்சியிருந்த இளைஞர்களில் பாதிப்பேர் இன்று இல்லை.நாம் நாடுதிரும்பும் போது காணப்போவது வெறும் சுடுகாட்டையா?
என்னைப் பொறுத்தளவில் இது ஒரு திட்டமிட்ட இன ஒழிப்பு.நாட்டிலுள்ள சிறுபான்மை இனமொன்றை அழித்து அதன் வெற்றியை கொண்டாடினார்கள் அண்மையில். நாமெல்லாம் வெடிகொளுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
சற்று சிந்திக்க ஆரம்பிப்போம்.கேளிக்கைகள், விருந்துகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு ஒதுக்கும் நேரத்தை சற்று நாட்டுக்காகவும் ஒதுக்குவோம். இங்கே எந்தவித கவலையுமில்லாமல் உலாவும் வெள்ளவத்தை தமிழர்களை நாம் திருத்தமுடியாது.இவர்களெல்லாம் 83இல் நடந்தது போல் தாய்நிலத்துக்கு அகதிகளாக அனுப்பப்படும் போது உணர்ந்துகொள்ளவார்கள்.எனது விருப்பமும் அதுவே.இங்கே ஆடம்பரமாக வாழ்பவர்கள் அங்கு வந்து பாடசாலை வகுப்பறைகளில் குடும்பம் நடத்தி தமிழனின் துயரங்களை அறியவேண்டும்.
நாம் என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து இவ்வாறு பின்னூட்டங்களின் மூலம் பரிமாறுங்கள். எதைப்பற்றியும் பயப்படத்தேவையில்லை.பயப்பட்டதெல்லாம் போதும். கோழைத்தனமாக "ஏன் வீண்வம்பு?" என ஒதுங்கியிருக்காதீர்கள்.
சாவு என்பது ஒருமுறைதானே.ஆனால் வீணே சாவதை தவிர்த்து குறைந்தது 10 களைகளையாவது களைந்துவிட்டு சாவதே மேல். நாம் வாழும், வாழப்போகும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பொம்.