மதப் பிரச்சாரங்கள் மனித ஈடேற்றத்துக்கு வழிவகுக்குமா?

Wednesday, August 29, 2007 - - 2 Comments


ஒவ்வோரு மனிதனும் ஏதோ ஒரு இனம், மதம் சார்ந்தவனாகவும், ஏதோ ஒரு மொழியை தாய் மொழியாக கொண்டவனுமாகவே உள்ளான். இவற்றில் இனமும் மொழியும் பிறப்பின் போது எவ்வாறிருந்ததோ இறப்பு வரைக்கும் அவனது அடையாளமாக, மாற்ற முடியாத ஒன்றாக, என்றைக்கும் நிழல் போல் தொடரும் அம்சங்கள். ஆனால் மதம் அவ்வாறில்லை. மனிதன் தான் விரும்பும் மதத்தை தேர்ந்தெடுத்தது பின்பற்றும் உரிமை அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கங்களும் இதற்கு தடைவிதிக்கவில்லை.
இதனையே சாதகமாக்கி, அல்லலுறும் மக்களுக்கு விடுதலை கொடுக்கிறோம் எனும் பெயரில், மதத்தை மூலதனமாக்கி, அதனையே வியாபாரப் பொருளுமாக்கி மக்களை ஏமாளிகளாக்கும் மதவாதிகள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமேயுள்ளனர். மாபெரும் எழுப்புதற் கூட்டங்கள் என்ற பெயரில் பூச்சாண்டி காட்டுபவர்கள் ஒரு புறம். வாழும்கலை, தியானம் எனும் பெயர்களில் கூட்டம் சேர்ப்பவர்கள் ஒருபுறம். இங்கே முதற் சாரார் மதத்தைப் பரப்பவும், இரண்டாம் சாரார் மதத்தை தக்கவைக்கவும் பாடுபடுகின்றார்கள். இத்தகையோரின் செயற்பாடுகள் மனிதனுக்கு இயல்பாகவே தோன்றக் கூடிய மதத்தின் மீதான பற்றை, பக்தியை, மரியாதையை வளர்க்கப் பயன்படப்போவதில்லை. மாறாக ஏதோ ஒரு கட்டாயத்தினாலும், கவர்ச்சியினாலும் உந்தப்பட்டு மதம் என்பது தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கையாளும் ஊடகம் எனும் எண்ணத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்து இயல்பாகவே இருந்துவந்த மதத்தின் மீதான பற்றையும் மரியாதையையும் கெடுக்கும் வழியே என்பது எனது கருத்து.
நான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்லன். ஏனெனில் சிந்திக்க ஆரம்பித்த நாள்முதல் ஒரு நாத்திகன். ஆனால் மதங்களுக்கு எதிரானவன் அல்லன். மதங்ளை மதிப்பவன். ஆனாலும் மதவாதிகளின் இத்தகைய, மக்களை பகடைகளாக்கும் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்காமலிருக்க முடியவில்லை.
டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன். இவர்தான் உலகளாவிய ரீதியில் நீண்ட நாட்களாக யேசுவை அழைத்துக் கொண்டிருப்பவர். இலங்கையிலும் அடிக்கடி இத்தகைய அழைப்புக் கூட்டங்களை நாடாத்துபவர். இலங்கை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுக்கும் இவர் ஆசீர்வாதம் வழங்கியிருந்தார்.அதன்பின்னர் வெளியிட்ட தீர்கதரிசனங்களை "இலங்கைக்காகப் பிரார்த்தனை" எனும் நூலில் காணக்கூடியதாயிருந்தது.
1. இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)
2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!
3. எல்லா தேயிலைத் தோட்டங்களும் செழிக்கும்.
4. இதனால் ஏற்றுமதி ஏராளமாக பெருகும், வருமானம் அதிகரிக்கும்.
5. இலங்கை அரசு பல தேசங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பணிபுரியும், வேலை வாய்ப்புகள் பெருகும்இ வேலையில்லாத் திண்டாட்டம் குறையும்.
6. நாட்டின் பெரும் பகுதி வருமானம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை தேவன் குறைப்பார், அதை நாட்டு மக்களின் நலனுக்காக செலவு செய்வார்கள்.
இவையனைத்தும் ஆண்டவன் அருளியதாக தினகரன் 2006 ஏப்ரலில் வெளியிட்ட தீர்க்கதரிசனங்கள். இவற்றில் ஒன்றாவது தீர்க்கதரிசனத்துக்கமைய இடம்பெற்றதா என்பது அந்த அண்டவனுக்கே வெளிச்சம்.
தீர்க்க தரிசனத்தின் பின்னரான ஒருவருடத்தில் இடப்பெற்றது என்ன? தமிழ்மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட்டனவா? தமிழருக்கு எதிரான யுத்தத்துக்காக பாதுகாப்புச் செலவு ஒதுக்கீடுதான் குறைக்கப்பட்டதா?
மாறாக மகிந்தவுக்கு வழங்கிய ஆசீர்வாதத்துக்கிணங்க அவர் தமிழர்களை அழிக்கும் பணியை திறம்பட செய்துவருகிறார். அவருக்கு ஆசிவழங்க முன்னர் தினகரன் சில விடயங்களை சிந்தித்திருக்க வேண்டும். மகிந்த அரசின் இன ஒழிப்பின் போது அழிக்கப்பட்ட தேவாலயங்களைப்பற்றியோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கம் அவர்களது உயிர் தேவாலயத்தினுள் பிரார்த்தனையின் போது பறிக்கப்பட்டமை பற்றியோ சிந்தித்திருந்தால் தமிழர்களை அழித்தொழிக்கும் பேரினவாத அரசுத் தலைவருக்கு ஆசீர்வாதம் வழங்கியிருக்க மாட்டார்.
தான் சார்ந்துள்ள இனத்தைவிட தான் பரப்பும் மதமே தனக்கு முக்கியம் என உணர்த்தியுள்ளார் தினகரன். எனவே இவரது பிரார்த்தனைகளும், எழுப்புதற் கூட்டங்களும் மக்களுக்கு எந்தவித பயனையும் தோற்றுவிக்காது, தனது மதத்தை பரப்பும் ஓர் முயற்சியாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
வெறும் ஆசை வார்த்தைகளையும், அற்ப சொற்ப சலுகைகளையும் நம்பி தமது பழமையான, தொன்றுதொட்டு தமது மூதாதையர்கள் கடைப்பிடித்து வந்த மதத்தை விட்டு வேறு மதங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.
மற்றையது வாழும் கலை. வாழும்கலை பயிற்சி என்றால் என்ன? (தெரிந்தவர்கள் தயவு செய்து தெளிய வையுங்கள்.) இந்தப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களைக் கூட கேட்டுவிட்டேன். அவர்களது பதிலும் எனக்கு திருப்தியாக இல்லை. கொழும்பில் கூட இப்போது இத்கைய பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. (பயிற்சிக் கட்டணமாக ரூ 2500.00 அறவிடப்படுகிறது.) சமையற்கலை வகுப்புக்கள், சிகை அலங்காரக் கலை வகுப்புக்கள், தையற்கலை வகுப்புக்கள் இவற்றைப்பற்றி எனக்கு நன்கு தெரியும்.
ஆனால் வாழ்க்கையை இவ்வாறுதான் வாழவேண்டும் என வரையறுத்து, அதனைப் பயில்வதற்கு காலம் வரையறுத்து, கட்டணம் அறவிட்டு பயிற்றுவிக்கும் முறையை ஆரம்பித்து வைத்து, புதுமையான வழியில் பணம் சம்பாதிக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
பூமியில் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எவ்வாறு வாழவேண்டும் என நன்கு தெரியும். இதுவரைகாலமும் வாழ்ந்து கழித்தவர்கள் எந்தவொரு வாழும்கலை பயிற்சிக்கும் சென்று பயின்றுதான் தமது வாழ்கையை திறம்பட வாழ்ந்து காட்டினார்களா?
சரி. மனிதன் வாழக்கூடிய வாழ்க்கை முறைகளை கூறும் பயிற்சியாக இருப்பின் அதனை கட்டணம் அறவிட்டு பயிற்றுவிப்பதன் நோக்கம் என்ன? ஆக கட்டணம் செலுத்தி பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் மாத்திரம்தான் வாழ்க்கையில் ஈடேற முடியுமா?
இத்தகைய வழிகளில் மதத்தை வியாபாரமாக்கி, மதத்தின் பெயரால் மக்களிடம் பணம் புரட்டும் மதவாதிகளும், மதத்தை பரப்பும் நோக்கோடு மக்களை பரிதாபத்துக்குரியவர்களாக மாற்றும் தினகரன் போன்ற பிரச்சாரக்காரர்களும் இருக்கும்வரை மதங்களை மரியாதைக்கரிய மதங்களாக மதிக்கும் மனித இயல்பு தொலைந்துபோயிருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

This entry was posted on 3:05 AM You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

Anonymous said...

சரி சரி ஆனா மதங்களை இழுக்காம எழுதுமன்

தங்க முகுந்தன் said...

மொழி இனம் சமயம் கலாசாரம் இவை அனைத்துமே மாற்றப்பட முடியாதன என்பதே எனது கருத்து.