பூர்வீகங்கள் பறிபோகும் பரிதாபம் !

Friday, September 7, 2007 - - 1 Comments

சிறீலங்கா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிறீலங்காவை ஆண்ட சிங்கள அரசுகள் கிழக்கைச் சிங்கள மயமாக்குவதைத் தமது முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றன என்பது எமக்கு வரலாறு தெளிவாக வழங்கும் செய்தி!

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னின்று செயற்படுத்திய பௌத்த பிக்குகளுக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களிடமிருந்து பூரண ஆதரவு கிடைத்தே வந்தது. பல தசாப்பதங்களாகக் கிழக்கை ஆக்கிரமிக்க முயலும் சிங்களத்தின் மற்றொரு முயற்சிதான் தற்போதைய தொப்பிக்கல ஆக்கிரமிப்பு!

தனது நீண்டகாலத் திட்டம் நிறைவேறியுள்ளதாக சிங்களம் மகிழ்ச்சி அடைந்ததன் வெளிப்பாடுதான் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட வெற்றி விழாக்களும், களியாட்டங்களும் என்ற விடயம் பலர் அறியா உண்மை! மட்டுமாவட்டத்தின் பொலனறுவைக்கான எல்லை மன்னம்பிட்டி ஆறுவரை நீண்டிருந்தது. சிங்களத்தின் நாசகாரத் திட்டத்திற்கு அமைய இந்த எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, வெலிக்கந்தையிலிருந்து மன்னம்பிட்டி வரையிலிருந்த பூர்வீகத் தமிழ்க் கிராமங்கள் பொலனுறுவையுடன் இணைக்கப்பட்டுச் சிங்கள மயமாக்கப்பட்டன. இவ்வாறு இணைக்கப்பட்ட எமது தமிழ்க் கிராமங்களான, கருப்பளை, முத்துக்கல், சொருவில், மன்னம்பிட்டி போன்றவற்றிற்குச் சிங்களப் பெயர்களைச் சூட்டி முழுமையான சிங்கள மயமாக்கியுள்ளனர். இயற்கையாகவே மிகவும் செழிப்பான விவசாய நிலங்கள் கொண்ட அப்பகுதியில் தற்போதும் மிகவும் சிறுபான்மையாகத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நிர்வாக ரீதியாகத் தமிழரின் நிலங்களை அபகரித்த சிங்களம், மட்டு மாவட்டத்திற்குள்ளும் தமது நில ஆக்கிரமிப்பு வேலைத் திட்டத்தைத் தொடர்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மட்டுமாவட்டத்தின் கள்ளிச்சை வடமுனைப் பகுதியிலும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்வதற்குப் புத்த பிக்குகள் மூலமாகச் சிங்களம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டது.
அக் காலகட்டத்தில் மட்டுமாவட்டத்தில் தமிழ் உணர்வுடன் அரச அதிகாரிகளாகக் கடமையாற்றியவர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக சிங்களக் குடியேற்றத் திட்டத்திற்குப் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டன. இத் தமிழ் உணர்வாளர்கள் மட்டுநகரில் இருந்த படித்த தமிழ் வாலிபருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு இங்கு பண்ணைகளை அமைத்துக் கொடுத்து இப்பகுதியில் அவர்களைக் குடியேற்றி அக்காலத்திலேயே எமது பூர்வீக நிலங்களைப் பாதுகாத்தனர். தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றிருக்காத அக் காலகட்டத்திலேயே தமிழ் உணர்வாளர்களால் பாதுகாக்கப்பட்ட கள்ளிச்சை வடமுனைப் பகுதித் தொடர்காடுகளுடன் இணைந்த மலைத் தொகுதிகள்தான் அவற்றின் வடிவங்கள் கொண்டு தொப்பிக்கல் மலை, கெவர்மலை, குடும்பிமலை, கார்மலை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றன. மியான்குளம், ஊத்துச்சேனை, நாப்பதாவில், அலியாலுடை, புல்லுட்டு மானோடை, மேசைகல்திடல் போன்ற பல கிராமங்கள் வளம் செழிக்கும் விவசாய நிலங்களாகும்.
1977 யூலையில் சுதந்திரக் கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியினர் தாங்களும் தமிழ்மண் அபகரிப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டுவதற்கு மாகாவலித் திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழர் நில அபகரிப்பில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர் தொப்பிக்கல் மலைப் பகுதியிலிருந்து சில மைல்கள் தூரத்திற்குள் மதுறுஓயா நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்பட்டு அதைச் சூழவுள்ள பிரதேசங்கள் ஏ, பீ, சீ என மூன்று பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. ஏற்கெனவே சிங்கள மயமாக்கப்பட்ட பிரதேசங்கள் ஏ வலயம் எனவும், வாகரையிலிருந்து வடமேற்காகக் காடும் காடுசார்ந்த நிலங்களும் பீ வலயம் எனவும், தொப்பிக்கல் - அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் சீ வலயம் எனவும் பிரிக்கப்பட்டன. இவ்வாறு வலயங்களாகப் பிரித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கள்ளிச்சை வடமுனை உட்பட பல தமிழ்க் கிராமங்களில் மீண்டும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள சிங்கள இனவாதம் முயற்சிகளை மேற்கொண்டது.
இம்முறை மேற்கொள்ளப்பட்ட குடியேற்ற முயற்சிகளை மன்னம்பிட்டிக்கு அருகிலிருந்த ‘திம்புலாகல’ விகாரையிலிருந்த பௌத்த பிக்குவான ‘லீலானந்ததேரோ’ என்பவரே முன்னின்று செயற்படுத்தி வந்தார். இவர்களால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்ற முயற்சிகளுக்கு அங்கு வாழ்ந்த தமிழ் மக்களால் தீவிர எதிர்ப்புக் காட்டப்பட்டது. தமிழ் மக்களின், குடியேற்றத்திற்கு எதிரான தீவிர எதிர்ப்பைக் கண்ட ஆளும் வர்க்கம் தமிழ் மக்களுக்கும், பொலனறுவை, மட்டுமாவட்ட அரச அதிகாரிகளுக்குமான ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள், குடியேற்றங்களுக்குத் தமது தீவிர எதிர்ப்பைக் காட்டியதால் குடியேற்றங்களை நிறுத்துவதற்கு அரச அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இச் செய்திகளைக் கேள்வியுற்று ஆத்திரமும் ஆவேசமும் கொண்ட லீலானந்த தேரர், தொப்பிக்கல் மலை உச்சியில் ஏறிநின்று பார்க்கும்போது கண்ணுக்கெட்டிய பிரதேசங்கள் யாவும் சிங்களக் கிராமங்களாகவும் சிங்கள மக்களாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப் பெரிய கனவு என்றும், அதை யார் தடுத்தாலும் நிறைவேற்றியே தீருவேன் என்றும் சபதம் எடுத்துக் கொண்டாராம். இந்த விருப்பமானது ஒரு லீலானந்த தேரரின் தனிப்பட்ட விருப்பமல்ல! முழுச் சிங்களத் தலைமைகளின் விருப்பமும் இதுவேயாகும். இச் சம்பவங்களைத் தொடர்ந்து இப் பிரதேசங்களில் அதிக அளவிலான தமிழர்களைக் குடியேற்றும் வேலை தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இக் காலப் பகுதியில் பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கணேசலிங்கம் தமிழ் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் வடமுனையில் துறைநீலாவணை மக்கள்போல வீரஞ் செறிந்த மக்களைக் குடியேற்றினால்தான் இப் பகுதிகளையும் சிங்களவரிடமிருந்து பாதுகாக்க முடியும் என்று கேட்டுக்கொண்டார். 1958 ம் ஆண்டுக் காலத்தில் தமிழர்களைத் தாக்க வந்த சிங்களக் காடையர்களை அடித்து பின்னர் காடையர்களுக்கு துனையாக வந்த இராணுவத்தினரையும் அடித்து விரட்டிக் கிழக்கு மண்ணின் இன மானத்தையும் வீரத்தையும் உலகறியச் செய்தவர்கள் துறைநீலாவணை மக்கள் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை!
1978ன் பிற்பகுதியில் தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டம் எழுச்சியுறத் தொடங்கிய காலகட்டத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டு அம்பாறை மாவட்டத்திற்கான முதலாவது இரகசியப் பணை;ணையை தொப்பிக்கல் மலைப் பகுதியிலேயே அமைத்தார். தொப்பிக்கல் மலையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளினதும் அரசியல், சமூக கேந்திர முக்கியத்துவத்தினை அன்றே உய்த்தறிந்ததால்தான் தலைவர் அவர்கள் மாவட்டத்திற்கான முதல் பண்ணையை இப் பிரதேசத்தில் அமைத்திருக்கின்றார். 1983ம் ஆண்டுக்குப் பின்னர் தீவிரமடைந்த தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில், மட்டுமாவட்டத்தில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதல், நிர்மலா நித்தியானந்தன் சிறையுடைப்பு போன்ற பல தாக்குதல்கள் இப் பகுதிகளிலிருந்துதான் செயற்படுத்தப்பட்டன. 1984ல் லெப்படினன் பரமதேவாவின் வீரச்சாவும் அதைத் தொடர்ந்து மட்டுமாவட்டத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளில் பயிற்சிபெற்ற விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், போராட்டச் செயற்பாடுகள் மிகவும் மந்த நிலைக்குச் சென்றன. நகர்ப்புறத்திலே நிலைகொண்டிருந்த அதிரடிப்படையினர் தொப்பிக்கல் நோக்கிப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவ்வாறு மிகவும் மந்த நிலையிலிருந்த மட்டு மாவட்ட போராட்டச் செயற்பாடுகளைச் சீர்செய்வதற்காகத் தேசியத் தலைவர் அவர்களால் பல புதிய அணிகள் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டு அனைத்துப் போராளிகளையும் ஒருங்கிணைத்து மீண்டும் புதிய உத்வேகத்துடன் போராட்டம் நகர்த்தப்பட்டதுஏறாவூர் பொலிஸ்நிலையத் தாக்குதல், காயாங்கேணியில் வைத்து வாகரை இராணுவத்தினர் மீது மேற்கொண்ட பதுங்கித் தாக்குதல்கள் போன்ற அதிரடித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்திற்குள்ளும் போராட்டம் விஸ்தரிக்கப்பட்டது. இக் காலப்பகுதியில்தான் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் தளம் அமைத்து அங்கும் போராட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 1984ல் மந்த நிலையிலிருந்த போராட்டச் செயற்பாடுகள் மிகவும் குறுகிய காலத்திலேயே தலைவர் அவர்களால் சீர்செய்யப்பட்டு தாக்குதல்கள் நடத்தக்கூடிய அளவுக்கு மேலுயுயர்த்தப்பட்டன. 1985 ஆண்டுக் கடைசிப் பகுதியில் மீண்டும் சிறீலங்கா படைகளைத் தொப்பிக்கல் மலையை நோக்கி வரலாற்றில் முதல் தடவையாக 05 உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து காடுகளுக்குள் பின்வாங்கிய போராளிகள் தொடர்ச்சியாகப் பல கெரில்லாத் தாக்குதல்களை இராணுவத்தினருக்கு எதிராக மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து 1986ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தும் தொப்பிக்கல், கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. 1987ல் இந்திய இராணுவக் காலப்பகுதியில் தொப்பிக்கல் பகுதிகளில் இந்திய இராணுவத்தினரால் முதன் முதலாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிலைகொண்டனர். இக் காலப்பகுதியில் போராளிகள் சிறுசிறு குழுக்களாக அப்பகுதிகளில் செயற்பட்டனர். இந்திய இராணுவ வெளியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் ஈழப்போரைத் தொடர்ந்து 1993 ஆண்டு காலப்பகுதியில் புளட் மோகன், ராசிக்குழு போன்றவர்களின் காட்டிக் கொடுப்புக்களுடன் தொப்பிக்கல் மலைப்பகுதி மீண்டும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு அங்கு முகாம்கள் அமைத்து நிலைகொண்டனர். அப்போதும் அங்கு நிலைகொண்டிருந்த பெருமளவிலான போராளிகள் வடக்குநோக்கி நகர்த்தப்பட்டனர். வடக்குநோக்கி நகர்த்தப்பட்ட போராளிகளுக்கு விசேட பயிற்சியும், விசேட ஆலோசனைகளும் தலைமையினால் வழங்கப்பட்டு 1994ம் ஆண்டு மீண்டும் கிழக்கிற்குப் போராளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்புப் பயிற்சிபெற்ற புலிகளின் அணிகளினால் தரவைக்குளம் இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்டதுடன் பல அதிரடித் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்காக இப் பிரதேசத்திலிருந்து இராணுவத்தினர் பின்வாங்கியதைத் தொடர்ந்து அப்பிரதேசங்கள் முழுவதும் மீண்டும் புலிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து நிர்வாக நடவடிக்களும் மேற் கொள்ளப்பட்டன.
ராசிக்குழு, புளட் மோகன் குழு போன்ற துரோகிகள் அழிக்கப்பட்டு மட்டுமண் விடியலின் திசையில் வீறுகொண்டெழுந்தது.
கிழக்கு மண்ணில் தமிழர்கள் பலத்துடன் இருப்பதைச் சீரணிக்க முடியாத சிங்களம் பண ஆசையைக் காட்டி மீண்டும் ஒரு புதிய துரோகியை உருவாக்கித் தமிழரின் பலத்தைச் சிதைக்க முற்பட்டனர். பணம் மற்றும் சிற்றின்பங்களுக்கு விலைபோன துரோகி கருணாவின் காட்டிக் கொடுப்புகளுடன் பாரம்பரியமாக மட்டுமக்களால் பாதுகாக்கப்பட்ட மண் மீண்டும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. சிங்கள இராணுவத்தினாலும், துரோகிகளின் காட்டிக் கொடுப்புக்களினாலும் தொப்பிக்கல பலதடவை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. ஓவ்வொரு ஆக்கிரமிப்புக்களும் குறுகிய காலத்திலேயே தோல்வியில் முடிவடைந்துள்ளன. தமிழர்க்கென்று எவ்விதத் தலைமையும் அற்ற காலப் பகுதியிலேயே தமிழர்களின் இப் பூர்விக நிலங்கள் தமிழர்களின் முயற்சியினால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல! தமிழர்க்கென்று செயற்திறன் மிக்க வீரமிகு தலைவர் இருக்கின்றார். முப்படையும் கொண்ட சிறப்புப் படைக் கட்டுமானம் உள்ளது. இத் தேசியத் தலைமையின் கீழ் அணிதிரண்டு கிழக்கு மக்கள் சிங்கள இனவாதத்திடமிருந்து தமது பூர்வீக மண்ணை மீட்பார்கள் என்பது உறுதி!

This entry was posted on 2:23 AM You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

Anonymous said...

//இத் தேசியத் தலைமையின் கீழ் அணிதிரண்டு கிழக்கு மக்கள் சிங்கள இனவாதத்திடமிருந்து தமது பூர்வீக மண்ணை மீட்பார்கள் என்பது உறுதி!//

அந்த நாளும் எந்நாளோ ?
காத்திருப்போம்